
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான ஃபென்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண மையங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன், மழைநீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் 22,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளதால் முக்கிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபென்சல் புயல் கரையை தொட்டவுடன் அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்பின், காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி புயல் சுமார் 7 கி.மீ வேகத்தில் கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மிக கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.