புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்க இயக்குனரகம் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தது.
பல கட்ட விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இந்நிலையில் வித்யாகுமார் என்ற நபர் செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மயிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது, அவர் அமைச்சராக பதவியேற்க மாட்டார் என உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் ஜாமீன் கிடைத்த சில நாட்களிலேயே அமைச்சராக பதவியேற்றார். இது விசாரணையை பாதிக்கும். எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.’ என செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்சங்கர், ‘அரசியல் உள்நோக்கம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விசாரணை பாதிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை அணுகியிருக்கும். அவர்கள் எதுவும் செய்யவில்லை.
இத்தகைய ஆதாரமற்ற மனுக்கள் அரசியல் அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. எனவே, இதுபோன்ற மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்றனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது எப்படி அமைச்சரானார். குறிப்பாக சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கிய பின், அமைச்சரானார். இது வழக்கு தொடர்பான சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்காதா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் வழக்கில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம். இருப்பினும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய இந்த மனு மீது விசாரணை நடத்துவோம். அப்போது, அவர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறாரா என்பதும் பரிசீலிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்பட மாட்டாது. வழக்கின் விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.