சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் முதலே பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, தங்களுக்கான இடங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட கடந்த சில நாட்களாகவே அனைவரும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.
இன்று காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர்.. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து பகுதிகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கும்.
இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் சில இடங்களில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் முதலே பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, தங்களுக்கான இடங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 800 தீயணைப்பு வீரர்களும், கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேரும் என 1,100 தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னையில் முக்கியமானதாக கருதப்படும் 64 பகுதிகளில் தயார்நிலையில் உள்ளனர். அதில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 21 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் முக்கிய பஸ் நிலையம், பூங்கா, மண்டபம் போன்ற பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் வினியோகித்துள்ளார்கள். அதன்படி, பாதுகாப்பான முறையில் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.