தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்படும். தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாகச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த தடை, மீன்களின் இனப்பெருக்கத்தைக் பாதுகாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டாலும், மீனவர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கிறது. மீன்களின் வரத்து குறைவால் விலையும் உயரும், இது பொதுமக்களுக்கே சிக்கலாகும்.
சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த பாளையம், ஒருபோதும் கடலை விட்டு விலகாத கடல்சார் செயற்பாட்டாளர். அவர் கூறுகையில், சித்திரை மாதத்தில் ‘கோடை புயல்’ ஏற்படும் அபாயம் மிக அதிகம். இது கண் இமைக்கும் நேரத்தில் வரும் ஒரு மோசமான புயல். வானிலை மையங்கள் உருவாகும் முன்னரே இந்த காலத்தை மீனவர்கள் எச்சரிக்கையாகக் கடந்து வந்துள்ளனர்.
காற்றின் தன்மை மற்றும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக ‘குன்வாடை’ என்ற விச காற்று கடலில் புயலையும் இடியையும் உருவாக்கும். இரவில் மீன்பிடிக்கும்போது ஆர்வத்தில் காற்றை கவனிக்க மறந்துவிடுகிறோம், அப்போது புயல் வந்தால் உயிர் இழப்பும் கூட நேரிடலாம். அதனால் தான், இந்த நேரத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்றாலும், அதிகாரப்பூர்வ விளக்கம் ‘மீன் இனப்பெருக்கம்’ என்று மட்டும் கூறப்படுகிறது.
நாட்டுப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்ஜின் படகுகள் நடுக்கடலுக்குச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அங்கு எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் மீட்பு சாத்தியம் குறைந்திருக்கும். அதனால் தான், இன்ஜின் இல்லாத படகுகள் மட்டுமே கரைக்கு நெருக்கமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், பிரிவினையை உருவாக்கியுள்ளன. இன்ஜின் படகுகள் கடலுக்குள் தூரமாகச் சென்று மீன் பிடிக்கின்றன, இதனால் கடல்நிலவியல் சமநிலை கெடுகிறது. ஆமைகள் உள்ளிட்ட கடல் உயிரிகள் உயிரிழக்க காரணமாகின்றன. நாட்டுப் படகுகள் இருந்தபோது கிடைத்திருக்கும் வகைமிகுந்த மீன்கள் இன்று மிகவும் குறைந்துள்ளன.
‘கோடை புயல்’ எல்லா கடற்பகுதிக்கும் பொருந்தாது. சில இடங்களில் மண், சில இடங்களில் பாறைகள் இருக்கும். கோடை புயல் ஏற்பட்டால், ஆழ் கடலிலிருந்து கரைக்கு மீன்கள் வர வாய்ப்பு அதிகமாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த புயல் ஏற்படவில்லை, இதனால் கிடைக்கும் நன்மைகளும் குறைந்துவிட்டன.
அரசு, இந்த தடைக்காலத்தில் ₹8000 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்த தொகை 61 நாட்களுக்கு போதுமானதல்ல என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்றும், மீனவர்கள் மட்டுமின்றி, கடற்கரை வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் என மீனை நம்பி வாழும் அனைவருக்கும் உதவிகரம் நீட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். மேலும், கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்புக்காக ‘லைஃப் ஜாக்கெட்’ வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
மீன்களின் எண்ணிக்கையை அரசு தினசரி ரோந்து மற்றும் தரவுகள் மூலமாக கணிக்கிறது. தானும் கடலுக்குச் செல்லும் போது அனுபவத்தின் அடிப்படையில் கணக்கெடுக்கும் பழக்கம் உள்ளதாக பாளையம் கூறுகிறார். மீன்களின் எண்ணிக்கை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இக்காலம் மீனவர்களுக்கும், மீனை நம்பி வாழும் பொதுமக்களுக்கும் கடினமானது. கடலில் செல்லும் முன் கடலம்மாவை வேண்டிக் கொண்டு தண்ணீரை தெளித்து செல்வது ஒரு நம்பிக்கையின் செயலாகவே உள்ளது. கடலம்மா எங்களை கைவிட மாட்டாள் என்றும் அவர் நம்புகிறார்.
இந்த தடைக்காலம் மீன்களுக்கு மட்டும் அல்ல, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியமான காலமாகிறது.