சிவகங்கை: சிவகங்கை ஜூஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் 200 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை நகரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் 200 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பழ ஜூஸ், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் சிவகங்கை நகர் முழுவதும் உள்ள பழ விற்பனைக் கடை மற்றும் பழச்சாறு கடைகளில் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், பழச்சாறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 200 கிலோ அழுகிய ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், கொய்யா உள்ளிட்ட பழங்கள் ஜூஸ் தயாரிக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பழங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அழுகிய பழங்களை பழச்சாறு தயாரிப்புக்காக வைத்திருந்த கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் கடை உரிமையாளர்களிடம் அழுகிய பழங்களில் ஜூஸ் தயாரிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து எடுத்துரைத்த அலுவலர்கள் அழுகிய பழங்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.