தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகளை நேற்று வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர்.
இந்த யானைகள், தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையை கடந்து, நொகனூர் வனப்பகுதியில் ஏற்கனவே முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகளுடன் சேர்ந்தன. தாவரகரை, மலசோனை, கண்டகானப்பள்ளி, கெண்டகானப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த இந்த யானைகள், நேற்று மலசோனை அருகே உள்ள பகுதியில் முகாமிட்டன.
அங்குள்ள ஏரியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் ஆனந்தக் குளித்தன. முல் பிளாட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், மலசோனை, கண்டகான்பள்ளி, தாவரக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த யானைகளை தொடர்ந்து கண்காணித்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 10 யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.