கோடை வெயிலால் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டேங்கர்களில் தண்ணீர் ஏற்றி நிரப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கர் பரப்பிலும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் பகுதிகளில் 7,360 ஏக்கர் பரப்பிலும் வனம் பரவியுள்ளது.
மலைகளுக்கு இடையே உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, மான், ஹைனா, குள்ளநரி, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், கோடை காலம் துவங்கியுள்ளதால், கிராமப்புறங்களிலும், வனப்பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. ஆனால், வனப்பகுதிகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர்.

தற்போது வெப்பநிலை அதிகரிப்பால் மேற்கண்ட தொட்டிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் குடிநீருக்காக கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. எனவே வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரி கூறியதாவது:- வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கோடையில் வறண்டு கடும் வறட்சி நிலவுகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இருப்பினும் குடிநீருக்காக வன விலங்குகள் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து குடிநீருக்காக வெளியே வரும் மான்கள் தெருநாய்களால் காயமடைவதுடன், சில இடங்களில் சாலையை கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.
எனவே, வன விலங்குகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணியை துவக்கி உள்ளோம். திருப்போரூர், திருக்கழுக்குன்றம் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகிறோம். தொட்டிகளில் சுழற்சி முறையில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் கோடை மழை பெய்தால் மட்டுமே வன விலங்குகளின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.