தஞ்சாவூர்: அண்ணா சிலை பகுதியில் இருந்து ஜூபிடர் தியேட்டர் வரையில் புதிதாக கட்டப்பட உள்ள வணிக வளாகத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைப்பது என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில ;மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. கண்ணன் முன்னிலையிலும் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. இதில் மாநகர மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:
எஸ். வெங்கடேஷ்: பழைய மாரியம்மன் கோயில் சாலையில் பள்ளம் இருப்பது குறித்து 3 மாதங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காசிம் நகரில் பாதாள சாக்கடை பிரச்னை குறித்து 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனால் ஏன் வரி கட்ட வேண்டும் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உணவகம் நடத்துபவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடத்தை இடித்து கட்டுகின்றனர். இதை தடுத்து நிறுத்தாதது ஏன்?
மேயர்: கட்டிடத்தை இடிப்பது தெரிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மழை நீர் வடிகால் கட்டமைப்பு தொடர்பாக ரூ. 90 கோடி திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது. அதனால் விரைவில் பாதாள சாக்கடை பிரச்னைகள் சரி செய்யப்படும்.
ஆணையர். மாமன்ற உறுப்பினர் தெரிவித்த உணவக நிர்வாகத்தினர் கட்டிடத்தை இடிப்பது தடுத்து நிறுத்தி உள்ளோம்.
ஏ. காந்திமதி: செய்த பணிகளுக்கு ரசீது கொடுத்தும், பணம் வராததால்தான் ஒப்பந்ததாரர் அடுத்த பணிகளைச் செய்ய மாட்டேன் என்று தெரிவிக்கிறார். ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை உடனடியாக பட்டுவாடா செய்தால், அவரும் பணியைச் செய்வார். பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா?
பி. ஜெய்சதீஷ்: செண்பகவல்லி நகரில் பகுதியில் 20 அடி தூரம் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படவில்லை. நானும் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நீங்களும் வந்து பார்த்து உள்ளீர்கள், ஆனால் இதுவரை பணிகள் நடக்கவில்லை. ஆட்டுக்காரத் தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் புதைந்து உள்ளது.
மேயர்: ஒப்பந்ததாரர் சரியாக வேலை செய்யவில்லை. வேறு ஒப்பந்ததாரர் இருப்பது தெரிவித்தால், அவரை நியமிக்கலாம். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுத்து பணிகளை செய்து விடலாம்.
அண்ணா.பிரகாஷ்: கீழவாசல் பகுதியில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்துள்ளது. இந்த பகுதியில் 8 மேன் ஹோல் உடைந்துள்ளது குறித்து தெரிவித்துள்ளேன். ஆனால் நடவடிக்கை இல்லை.
கண்ணுக்கினியாள்: எனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. நானும் பலமுறை தெரிவித்து விட்டேன். எனது வார்டு பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா நடக்க உள்ளது. எனவே அந்த பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னையை உடன் சரி செய்ய வேண்டும்.
ஆர்.கே. நீலகண்டன்: புதிய பேருந்து நிலையம் பின்புறம் மாநகராட்சி நிர்வாகம் கட்டிய கட்டடம் மாநாட்டுக் கூடமாகத்தான் கட்டப்பட்டது. இதில், திரையரங்கமாக மாற்றுவதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை ஏன் அணுகவில்லை.
ஆணையர்: அப்பணியை நிறுத்துமாறு உரிமதாரருக்கு நோட்டீஸ் கொடுத்தோம். அதை எதிர்த்து உரிமதாரர் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். அங்கு நாம் அனுப்பிய நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என வக்கீல் கூறுகிறார். இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முயற்சி செய்யப்படுகிறது.
வெ. கண்ணுக்கினியாள்: சரியான ஆதாரங்களைக் கொடுத்தால், உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வழக்குரைஞர் ஒப்புக் கொள்வார். நீங்கள் சரியாக ஆதாரங்களைக் கொடுக்கவில்லை.
கே. மணிகண்டன்: மாநாட்டுக் கூடத்தில் திரையரங்கத்துக்கு அனுமதி கொடுத்தது யார்? இதில், முறைகேடு நிகழ்ந்துள்ளது தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கவுள்ளேன்.
மேயர்: நான் அனுமதி கொடுக்கவில்லை. சிவகங்கை பூங்கா உள்பட ஸ்மார்ட் சிட்ட திட்டப் பணிகளில் அதிமுக காலத்தில் நிறைய முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே சில நிமிடங்களுக்கு வாக்குவாதமும், சலசலப்பும் நடைபெற்றது.
கோபால்: நீரேற்றும் நிலையத்தில் தடையில்லா மின்சாரம் இருக்கிறதா? மின்சாரம் தடைப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
மேயர்: அங்கு தடையில்லா மின்சாரம் இருக்கிறது. ஒருசில நேரத்தில் மட்டும் மின்சாரம் தடைப்பட்டாலும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. புதிய மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினருக்கு இதில் சந்தேகம் இருந்தால் நேரடியாக சென்று அங்கு ஆய்வு செய்யலாம்.
ஜி. ஆனந்த்: குடிநீர் வரி, புதை சாக்கடை வரி, சொத்து வரி ஆகியவற்றை ஒரே நேரத்திலேயே வசூலிக்காமல், தனித்தனியாக வசூலிக்கப்படுவதால், மக்களிடம் குழப்பம் நிலவுகிறது. ஏற்கெனவே வரி செலுத்திவிட்ட நிலையில், மீண்டும் எதற்காக பணம் கேட்கின்றனர் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைப் புகைப்படம் எடுத்து அவமானப்படுத்தப்படுகின்றனர்.
தி. புண்ணியமூர்த்தி): இதற்கு யார் அனுமதி கொடுத்தது?
துணை மேயர்: வரி வசூலிக்கும் நோக்கம் சரியாக இருந்தாலும், புகைப்படம் எடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
மேயர்: அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்தத் தவறை யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அண்ணாசாலையில் இருந்து பழைய ஜூபிடர் தியேட்டர் வரையில் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.