சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையங்கள் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலையில்லாத இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும். 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட கல்வித் தகுதிகள் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். கூடுதல் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. முகாம் மூலம் வேலை பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் கலந்து கொள்ள, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது விவரங்களை மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவுறுத்தியுள்ளார்.