சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ – ஜியோ) முன்வைத்தது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புதல், காலவரையற்ற இடைநீக்கம் விடுப்பு வழங்குதல், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காததே பணி முடங்கியதற்கு காரணம்.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு சார்பில் சங்க நிர்வாகிகளிடம் அவ்வப்போது பேச்சு வார்த்தை நடத்துவதும், விரைவில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் தொடர்வது வாடிக்கையாகி உள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. இது வேதனை அளிக்கிறது. மேலும், இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்தான்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். மாறாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நினைப்பது சரியல்ல. எனவே, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை இனியும் காலம் தாழ்த்தாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.