புதுச்சேரி: புதுச்சேரி மீன்வளத் துறை இணைச் செயலர் புனித் மேரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடல் மீன் வளத்தை நீண்டகாலமாக பராமரிக்கும் வகையில் இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது.
புதுச்சேரியின் கிழக்குக் கடல் பகுதிகள், கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம், புதுச்சேரி மீனவ கிராமம், காரைக்கால் பகுதியில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம், ஆந்திரா அருகே உள்ள ஏனாம் பகுதியில் உள்ள மீனவப் பகுதிகள் என 61 நாட்களுக்கு 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமரம் போன்ற பாரம்பரிய மீன்பிடி படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் தவிர மற்ற அனைத்து வகை படகுகளும் குறிப்பாக இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை அடுத்துள்ள மாஹே பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 61 நாட்கள் தடை விதிக்கப்படும். புதுச்சேரியில் சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்றார்.