சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 224 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகப் பொய்யாகப் பதிவு செய்திருப்பதாக அரபோர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு சில நாட்களுக்கு முன் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது. மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பிறந்த தேதியின் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 189 பேராசிரியர்கள் பணிபுரிவதை கண்டறிந்துள்ளோம்.
ஒரு பேராசிரியர் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய துணைவேந்தர் ஆர்.வேல்ராஜுக்கு தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.