சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் குறைபாட்டை போக்கி நலமோடு வாழ உதவும் உணவுகளில் கீரைகள் முக்கியமானவை. அவற்றை பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கீரைகள் உடலுக்கு வலிமையும் வன்மையும் அளிக்கக் கூடியவை. கீரைகளை உணவில் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் நோய் அணுகுவது குறையும். பல நோய்களுக்கு மருந்தாகவும் கீரைகள் அமையும்.
முளைக்கீரை: இருமலை நீக்கும். பசியை உண்டு பண்ணும். வெப்பக் காய்ச்சலை தணிக்கவல்லது. சொறி, சிரங்கு முதலிய நோய்கள் குணமடையும்.
கலவைக்கீரை: வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்ற உடலினருக்கும் ஏற்றது. இதயத்தை வலுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும். எந்த வகை மருந்து உண்ணும் காலத்திலும் உண்ணலாம்.
புளிச்சக்கீரை: கெட்ட கொழுப்பை கரைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கல்லீரலை பலமாக்கும். உடல் சூட்டை தணிக்கும். பித்தம் அதிகமாகி சுவை இழப்பு ஏற்பட்டவர்களின் சுவையை மீட்டுத்தரும்.
பசலைக்கீரை: சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. ருசியின்மை, வாந்தி போக்கும். நீரடைப்பு, நீர்க்கட்டு, வெள்ளை நோய்க்கு சிறந்தது. சிறுநீர் கல்லை கரைக்கும் ஆற்றல் கொண்டது.
பொன்னாங்கண்ணி: காயகற்ப முறைப்படி உண்ண உடலுக்கு அழகை உண்டாக்கும். சருமத்தை பாதுகாக்கும். மூலநோயை கட்டுப்படுத்தும். மூளைக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். கண்பார்வைக்கு சிறந்தது.
அகத்திக்கீரை: எலும்பைப் பலப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பித்த மயக்கம் போக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். மருந்தை முறிக்கும் தன்மை கொண்டது.
சுக்கான் கீரை: உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். குடல் புண்களை ஆற்றும். செரிமானத்தை சீராக்கும். சொறிசிரங்கை போக்கி மேனியை பாதுகாக்கும் மூலத்திற்கு நற்பலனை தரும்.