சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகளுக்கான திரைப்படங்கள் திரையிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் குழந்தைகள் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இம்மாதம் ‘மரங்களின் கனவு’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பு குறும்படம் திரையிடப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திரையிடுவதற்கான ‘லிங்க்’ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக வகுப்பு நேரத்தில் படம் திரையிடப்பட வேண்டும். இந்தப் பணிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பான ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்காக படத்தைத் திரையிடுவதற்கு முன், அவர் படத்தைப் பார்க்க வேண்டும். பிறகு, கதைச் சுருக்கத்தைப் படித்து, படத்தின் அடிப்படைப் பின்னணியை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
அதற்கான வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, படம் திரையிடப்பட்டு மாணவர்களுக்குக் காட்டப்பட வேண்டும். மாநில அளவிலான குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறப்பிடம் பெறும் 25 மாணவ, மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.