செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ. 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம், 620 கிராம் வெள்ளி மற்றும் ஐபோன் ஆகியவை மீட்கப்பட்டன. கோயில் அதிகாரிகள் அந்த போனின் உரிமையாளரை தேடி பார்த்தபோது, அது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது.
விசாரித்ததில், தினேஷ் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து ஐபோனை கேட்டுள்ளார். ஆனால், “காசில் உள்ள பொருட்கள் அனைத்தும் முருகனுடையது” எனக்கூறி, போனை கொடுக்க கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது. போனில் உள்ள டேட்டாவை மட்டுமே எடுக்க முடியும் என்றும், போனை தர முடியாதுஎன்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினேஷ் தனது முக்கிய தரவை எடுத்தபோது, அவர் தொலைபேசியின் உரிமையை இழந்தார். இதனால் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த விவகாரம் சமீபத்தில் அரசின் கவனத்துக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ஐபோன் விரைவில் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்” என்று உறுதியளித்தார். இன்று சேகர் பாபு வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஐபோன் இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தினேஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.