சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலித்து, டிசம்பர் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுகள் இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு (2024-25) கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத் தொகையை வசூலித்து டிசம்பர் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட வேண்டும். நடைமுறை பாடம் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.225 ஆகவும், நடைமுறை பாடம் இல்லாத மாணவர்களுக்கு ரூ.175 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை தாண்டாத எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி பிரிவினருக்கும், பிசி, பிசி-எம் பிரிவினருக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டண தொகையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20-ம் தேதி முதல் செலுத்தலாம். ஒரு பாடத்திற்கு ரூ.50 மற்றும் இதர கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை மதிப்பெண் பட்டியலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைன் கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு தலைமையாசிரியர்கள் மாநிலத் தேர்வுகள் இயக்குநரகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.