சென்னை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பந்திக்கோடு ஊராட்சியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், சுவாசப் பிரச்னை, மனநலப் பிரச்னை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அறிகுறிகளுடன் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும். பழங்கள் மற்றும் கொட்டைகள் பயன்படுத்துவதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். மக்கள் கிணறுகள், குகைகள், தோட்டங்கள் மற்றும் இருண்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். நோயாளிகளைப் பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.
இரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட வேண்டும். நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகளை உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.