சென்னை: வயதான காலத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். ஆனால் அதற்கான அர்த்தமும் விளக்கமும் ஒன்றே. வயதான காலத்தில் உடலின் மீளவுயிர்ப்பிக்கும் அளவு குறைந்து விடும். அதனால் தான் வயதான காலத்தில் பல உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வயதான காலத்தில் ஏற்படும் பல விதமான உடல்நல பிரச்சனைகளை பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனை முதுமை நோய் மருத்துவம் என்று கூறுகிறார்கள். வயதான காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிவதால், அதன் விளைவுகளை குறைக்க, உங்கள் வாழ்க்கைமுறையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.
சில திட்டங்களும் ஏற்பாடுகளும் செய்தால் போதும், உங்கள் வயதான காலம் அழகாக இருக்கும். அந்நேரத்தில் உடல்நல பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கும் திறனும் உங்களிடம் இருக்கும். வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளை பற்றி தெரிநி;து கொள்வோம்.
எலும்பு மெலிதல்: வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது எலும்பு மெலிதல். இந்த பிரச்சனையால் எலும்புகள் எளிதில் உடையக்கூடிய நிலையை அடையும். எலும்பின் அடர்த்தி குறைவதால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாய் நின்று விட்ட பிறகு, அவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை இது.
பார்வை (மாக்குலர்) குறைவு: பார்வை கோளாறு என்பதும் வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதனை மாக்குலர் டீஜெனெரேஷன் (பார்வை மங்குதல்) என்று கூறுவார்கள். இது வயதான காலத்தை இன்னமும் சிரமப்படுத்தும். பிம்பங்களை உணர்ந்து அதனை மூளைக்கு எடுத்துச் செல்வது கருவிழியே. வயதான காலத்தில் இந்த கருவிழி பாதிப்படைவதால் ஏற்படுவதே இந்த பிரச்சனை.
காது கேட்பதில் பிரச்சனை: வயதானவர்கள் சந்திக்கும் முக்கியான உடல்நல கோளாறுகளில் ஒன்று தான் காது கேட்கும் திறன் குறைவது. வயதான காலத்தில் காது கேட்பதில் குறைபாடு ஏற்படுவதை ப்ரெஸ்பைக்யூசிஸ் என்று சொல்வார்கள். காலப்போக்கில் அதிக அதிர்வெண் சத்தங்கள் அவர்களுக்கு கேட்பதில்லை. அதனால் காது கேட்கும் கருவியை பொருத்தி கொள்ள வேண்டியிருக்கும்.
கண் அழுத்த நோய்: வயதானவர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை தான் கண் அழுத்த நோய். கண்களின் உள்ளே உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த பிரச்சனை உண்டாகிறது. அதிகப்படியான இந்த அழுத்தம், உங்கள் பார்வைக்கான நரம்பை பாதித்து, பார்வை இழப்பை உண்டாக்கி விடும்.
அல்சைமர் நோய்: வயதான காலத்தில் ஏற்படும் நோய்களின் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது அல்சைமர் என்ற மன நோய். இந்த நோய் வந்து விட்டால், உங்கள் ஞாபக சக்தியும் யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிப்படையும். ஞாபக சக்தி தான் இந்த நோயின் ஆரம்ப கட்டமாகும்.