உதகை: ஃபெஞ்சல் புயலால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக உதகமண்டலம், கோத்தகிரி, கூடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலையில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று இரவு முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகமண்டலம், கூடலூர், கோத்தகிரி தாலுகாவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இந்த மூன்று தாலுகாக்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரவில் இருந்து பெய்த தொடர் மழையால் ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீரில் சிக்கிய பிக்அப் லாரி சில மணி நேர போராட்டத்திற்கு பின் மற்றொரு வாகனம் மூலம் மீட்கப்பட்டது. மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது.
மேலும் மேகங்களுக்கு மத்தியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஊட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்கள், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கனமழையுடன் கடும் குளிரால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய வைத்து கவனமாகச் சென்றன.