சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் நவம்பர் 1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு மற்றும் சோழவந்தானில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்னிந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 30-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் 31-ம் தேதி லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் நவம்பர் 1-ம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.