கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால், மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, சிறு பாறைகள் உருண்டு விழுந்ததால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் நேற்று மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை 6.30 மணி வரை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் பெருமாள்மலையை அடுத்த மலைப்பகுதியில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சிறு சிறு பாறைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாலைகளில் பரவியது. இதனால் சக்களம்-பெரியகுளம் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று காலை முதல் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சாலையில் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.