சென்னை: தென்கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்கிழக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் அனேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 3-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 4-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நவம்பர் 8-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இன்று தென்கிழக்கு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். இதேபோல், அரபிக் கடல் பகுதிகளில், தெற்கு கேரள கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.