சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பூச்சிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் நோய்கள் வராமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, மாவட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பு தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இதனுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், பேரிடர் நிவாரண முகாம்கள் அனைத்தும் கிருமிநாசினி செய்யப்பட வேண்டும்.
குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல் மற்றும் போதுமான அளவு குளோரின் வழங்குதல். கனமழைக்கு முன், ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலும், வட்டாரங்களிலும் 24 மணி நேர அவசரக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்களையும் அமைக்க வேண்டும். போதுமான அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்யவும்.
கொசு உற்பத்தியை ஒழிக்க, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். பருவமழைக்கு பிந்தைய காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் தொற்று நோய்கள் குறித்த தகவல்களை பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
காய்ச்சல் அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தேவையான இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப வேண்டும். பருவகால தொற்று நோய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதாரத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.