சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை, திருச்சி, அரியலூர், திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. கோடை தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பருவம் கோடை காலத்தின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்றும் நாளையும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ.) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 20-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கலாம். நேற்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. கடலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.