இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேல் சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழைப்பொழிவு பதிவுகளின்படி, மதுரை நகரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தல்லாகுளம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி 12 செ.மீ. திருச்சி மாவட்டம் துறையூர், கரூர் மாவட்டம் கடவூர் 9 செ.மீ. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, பொன்மலை, மதுரை மாவட்டம் புலிப்பட்டி, பெரியபட்டி 8 செ.மீ. பெரம்பலூர் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.