தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக அல்லது இயல்பை விட சற்று குறைவாக இருக்கும். நாளை முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மக்கினம்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் 10 செ.மீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, மூலைகரைபட்டி ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.