சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 10 வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட சற்று குறைவாக இருக்கும். ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மீனவர்கள் எச்சரிக்கை: அந்தமான் கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி புயல் உருவாக வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.