சென்னை: குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பதே பெரிய விஷயம்.
உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி உங்களுக்கு சில எளிய குறிப்புகள்.
ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம்.
இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான். எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின்பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்குவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.
உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். அன்பான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.
உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை, ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள்.
இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச் சாப்பிடுவான். எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். அவன் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.