சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘30 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், 3 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகுதான் விடுப்பு வழங்க முடியும் எனக்கூறி எனது விண்ணப்பத்தை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்தனர். எனவே, எனக்கு விடுப்பு வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்., சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் அக்ஷயா, ‘மனுதாரர் சிறையில் நேர்மையாக செயல்படுகிறார். சிறை அதிகாரிகளுக்கு பல்வேறு அலுவலக பணிகளிலும் உதவி செய்து வருகிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே, அவருக்கு விடுப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:- சிறைகளில் தண்டனை கைதிகளுக்கு சமையல், தோட்டம் பராமரிப்பு போன்ற பணி வழங்குவது வழக்கம். இருப்பினும், அவர்கள் நிர்வாக அலுவலக வேலைகளில் ஈடுபடக்கூடாது. மாத சம்பளம் பெறும் சிறைத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை கைதிகள் மீது திணிப்பது சரியல்ல. இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தண்டனை கைதிகளால் நிர்வாகப் பணிகள் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுமுறை அளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.