சென்னை: அரசு நிதியைப் பயன்படுத்தி பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (PUTER) என்ற அமைப்பைத் தொடங்கி விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தவர்களை சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை போலீஸார் கைது செய்தனர்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட் மறுத்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் கமிஷனர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார்.
துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை, மாறாக செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதே சமயம் காவல்துறை விசாரணைக்கு துணைவேந்தர் ஜெகநாதன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சாட்சிகளை ஆஜர்படுத்த தவறினால் கைது செய்து விசாரணை நடத்தலாம் என்றும் கூறியிருந்தார்.