சென்னை: பெண்கள் மற்றும் இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் பெண்களையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் வகையில் திமுக அமைச்சர் பொன்முடி கேவலமான பேச்சு பேசியதையும், அதற்காக திமுக பதவியில் இருந்து நீக்கப்பட்டதையும் நாம் அறிவோம்.

ஆனால், பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் இப்படி கீழ்த்தரமான கருத்தைப் பேசுவது ஏற்புடையதல்ல. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால், அவரது அமைச்சர் பதவியை நீக்கக் கோரி, வரும் 15-ம் தேதி மாலை, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மையங்களில், இந்து முன்னணி மகளிர் அணியான, இந்து அன்னையர் முன்னணி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் சைவ, வைணவ பெரியோர்கள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கினால் தான் “எதிர்காலத்தில் யாரும் இப்படி தர்மசங்கடமாக பேச மாட்டார்கள். எனவே, இந்த போராட்டத்தில் அனைத்து பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவிக்குமாறு இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.