திருப்பூர்: இந்து கோவில்களை அழிக்கும் தமிழக அரசை கண்டித்தும், அறநிலையத்துறையை கோவிலை விட்டு வெளியேற வலியுறுத்தியும், திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணியினர் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், நள்ளிரவில் போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் அருகே மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தடையை மீறி போராட்டம் நடத்திய மாநில தலைவர் உள்பட 900 பேரை போலீசார் கைது செய்தனர். காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நள்ளிரவில் திடீரென ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். எமர்ஜென்சி காலத்தை விட மோசமானது, தி.மு.க. அரசு. அரசு இப்படியே செயல்பட்டால் எதிர்காலத்தில் காணாமல் போய்விடும்.
இது இந்துக்களுக்கு எதிராக மட்டுமே நடக்கிறது. இந்து கோவில்களை மட்டும் இடித்து தள்ளுகிறார்கள். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் நடந்த போராட்டத்தின்போது பல இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.