பெரம்பூர்: கொரோனா காலத்துக்கு முன், அறிவியல் புத்தகங்களில் பாக்டீரியா, வைரஸ் என்ற வார்த்தைகளை படித்திருப்போம். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் புதிய வகையான பாக்டீரியா தொற்றுகள் மற்றும் வைரஸ் தொற்றுகள் தோன்றி மக்களை நோய்வாய்ப்படுத்துகின்றன. ஒவ்வொரு முறையும் காலநிலை மாற்றம் மற்றும் வானிலை காரணமாக, புதிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் தோன்றி மக்களை பாதிக்கின்றன.
கொரோனாவுக்கு முன், சாதாரண காய்ச்சல் அல்லது டைபாய்டு மலேரியா, சிக்கன் குன்யா, எலிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்களை மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இப்போது புதிய காய்ச்சலும், சளி, உடல்வலி, காய்ச்சலுடன் தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு, இதுபோன்ற பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் பாதிக்கப்பட்டாலும், உடல்வலி கண்டிப்பாக அவற்றுடன் சேர்ந்து வருகிறது. இதனால் சமீபகாலமாக பொதுமக்களுக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலும் குணமடைய 7 நாட்கள் ஆகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் மற்றும் கடும் குளிர் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் இ கோலை என்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா தொற்று காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த தொற்று கட்டுப்படும் முன்னரே, தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் பரவி வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் பரவுவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படும் என்றும், உடலின் பல்வேறு இடங்களில் கருப்பு கொப்புளங்கள் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவி வருவதாகவும், வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ் என்பது பூச்சிகளால் ஏற்படும் நோய் என்பதால், விவசாயத்தில் ஈடுபடுபவர்களும், செடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். எனவே, விவசாயம், புதர் மண்டிய பகுதிகள் மற்றும் காடுகளில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக IgM antibody, ELISA போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்து உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.
நோய் உறுதி செய்யப்பட்டால், டாக்ஸிசைக்ளின், அசித்ரோமைசின், ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை நோயாளியின் உடல் நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற அளவுகளில் கொடுக்க வேண்டும். 48-72 மணி நேரத்திற்குள் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ, இதய துடிப்பு, இதய துடிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரித்தாலோ, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ் குறித்து, பெரம்பூர் சென் மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறுகையில், “இந்த ஸ்க்ரப் டைபஸ் முற்றிலும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. பாதிக்கப்பட்ட பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் போது மனிதர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறது. தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது, இது கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலைவலி மற்றும் சில சந்தர்ப்பங்களில் வாந்தி, குறிப்பாக மூட்டு வலி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது பூச்சி கடித்தால் அரிப்பு ஏற்படும், அதனால் கீறினால் சிறிய பூச்சி கடி என்று நினைக்கிறோம், ஆனால் அரிப்பு அதிகரித்து காயம் பெரிதாகிறது.
பொதுவாக 2 நாட்கள் காய்ச்சல் வந்தால் பலவிதமான காய்ச்சல் பரிசோதனை செய்து காய்ச்சலுக்கு ஏற்ற மருந்துகளை கொடுப்போம், ஆனால் தற்போது ரத்த பரிசோதனையில் காய்ச்சல் இல்லை என தெரிய வரும்போது ஒரு பரிசோதனை செய்து இந்த பிரச்சனையை கண்டறியலாம். ஸ்க்ரப் டைபாய்டு சோதனை. குறிப்பாக காய்ச்சல் வந்து கை, கால்களில் சிறு கொப்புளம் இருந்தால் அதையே அறிகுறியாகப் பயன்படுத்தலாம். இது 100% குணப்படுத்தக்கூடிய நோய். இதற்கான ஆன்டிபயாடிக் மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் மிக எளிதாகக் கிடைக்கின்றன.
மிகவும் விலையுயர்ந்த மருந்துகள் எதுவும் இல்லை. அவை பொதுவாகக் கிடைக்கும் மருந்துகள். எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம். காய்ச்சல் கொஞ்சம் அதிகமாக இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் சரி செய்துவிடலாம். தற்போது, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்க அரசு வழிவகை செய்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட புண் உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன் மீது மருந்துகளை தடவ வேண்டும்.
இதை புறக்கணித்து, முறையாக மருந்து சாப்பிடாவிட்டால், இந்த கிருமியால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, பெரும் பிரச்னையை ஏற்படுத்தும், எனவே பொதுமக்கள் இதை அறிந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டும், என்றார். தவிர்க்க வேண்டிய உணவுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சீஸ், வெண்ணெய், எண்ணெய், இவை அனைத்தும் குடலில் செரிக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இவற்றை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதற்கு 5 நாட்கள் மருந்து சாப்பிட்டால் பூரண குணமடையலாம்.