சென்னை : நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-ந்தேதி மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.