தஞ்சாவூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்குக் கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம். ராமலிங்கம், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஆர். இந்திராகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.