சென்னை: தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில், 2,321 மெகாவாட் திறன் கொண்ட, 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. மழைக்காலங்களில் அவற்றின் அருகே உள்ள அணைகளில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு யூனிட் மின் உற்பத்திக்கான செலவு, 75 பைசாவுக்கும் குறைவாக உள்ளதால், காலை மற்றும் மாலை ‘பீக் ஹவர்’ மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நீர்மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போதிய மழையில்லாததால் நீர்மின் நிலையங்களில் தினமும் சராசரியாக ஒரு கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2023-24-ம் ஆண்டில் தமிழக நீர்மின் நிலையங்களில் இருந்து 422 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய மின்சார ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் அந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், இலக்கை விட 370 கோடி யூனிட் மின்சாரம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக நீர்மின் நிலையங்களில் அதிக மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இதன்படி கடந்த ஏப்ரல் முதல் 20-ம் தேதி வரை நீர்மின் நிலையங்களில் 260 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 215 கோடி யூனிட்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 45 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால், மத்திய மின் ஆணையம் நிர்ணயித்த இலக்கான 400 கோடி யூனிட்களை எட்ட முடியும் என மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.