கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான் இன்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை செய்துள்ளார். கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, 2017 ஏப்ரல் 23ஆம் தேதி அந்த எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அதில் காவலாளியான ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழ்நாடு அரசியலிலும், காவல் துறையிலும் பெரும் அதிர்வலை எழுப்பியது.

வழக்கை தொடக்கத்தில் போலீசார் விசாரித்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய சந்தேக நபராக இருந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
சிபிசிஐடி தொடர்ந்து வழக்கு விசாரணை செய்து வரும் நிலையில், தொலைபேசி அழைப்புப் பதிவுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். கடந்த வாரம் சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட போதும், அவர் ஆஜராகவில்லை. ஆனால் இன்று அவர் நேரில் வந்து ஆஜரானார்.
சயானிடம், சம்பவ நாளின் நிகழ்வுகள், தொடர்புடைய நபர்களுடன் பேசிய விவரங்கள், கொள்ளை மற்றும் கொலை சம்பந்தப்பட்ட சதி குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடிக்கு முன்னிலையில் ஆஜராகி விசாரணை செய்யப்பட்டிருந்தார். இதுவரை முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சயானிடம் நடக்கும் தற்போதைய விசாரணை வழக்கில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.