சென்னை: ‘கெப்பல் ஒன்’ என்ற ஐடி நிறுவனம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு சென்னையை அடுத்துள்ள போரூரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ‘பாரமவுண்ட் 1’ ஐடி நிறுவனத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 2,100 கோடிக்கு வாங்கியது. தற்போது ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று காலை அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென சோதனை நடத்தினர்.
இதேபோல், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் அமைந்துள்ள ‘கென் பைன் ஹோம்ஸ்’ என்ற கட்டுமான நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன்படி இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு சோதனை நடத்தியது.
மேலும், பெருங்குடியில் உள்ள எல் அண்ட் டபிள்யூ என்ற கட்டுமான மற்றும் நிதி நிறுவனமும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அங்கும் 7 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அளவு ரெய்டு முடிந்த பிறகே தெரியவரும். இன்று மீண்டும் சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.