தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 77 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அருவி முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 56,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவில் 65,000 கன அடியாக அதிகரித்தது.
நேற்று காலை 6 மணிக்கு 74 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 77 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகியவை முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து 3 அடி உயரத்திற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் முதல் நாகமாரை வரையிலான காவேரி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 76,794 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 77.36 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் கொள்ளளவு 39.37 டிஎம்சி. காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.