சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 6.10 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குறுவை அறுவடை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியுள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கியது. இருப்பினும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளில் 25 சதவீதம் கூட வாங்கப்படாததுதான் 4 லட்சம் மூட்டைகள் குவிவதற்குக் காரணம்.

ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை சேமிக்க இடம் இல்லாததால், பல நேரடி நெல் கொள்முதல் மையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, குவிந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக வாங்க வேண்டும்.
கொள்முதல் மையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.