ஆலங்காயம் : பால் உற்பத்தியை பெருக்கி, ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி, அரசு சலுகைகளை பெற, பால் உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சியில், ‘உங்களை தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ், கலெக்டர் தர்பகராஜ் கள ஆய்வு நடத்தினார்.
முன்னதாக நரசிங்கபுரம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, நரசிங்கபுரம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு, மாதம் 15 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு செல்வதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, உற்பத்தி செய்யப்படும் பாலை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, ஆவின் அதிகாரிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, நிறுவனத்தின் கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து பால் உற்பத்தியை பெருக்கி ஆவின் நிறுவனத்திற்கு வழங்கினால் விவசாயிகள் ஆவின் மூலம் பல்வேறு பயன்களை பெற முடியும் என ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருவிளக்குகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை பார்வையிட்டு பணியாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆவின் பால் கொள்முதல் அலுவலகத்திற்கு கலெக்டர் தர்பகராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், நரசிங்கபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.