
சென்னை: பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பலர் வாந்தி, பேதி, மயக்கம் அடைந்தனர். இதையடுத்து பலர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கன்டோன்மென்ட் பல்லாவரம் மோகனரங்கன் (42), காமராஜ் நகர் திருவீதி (56) ஆகியோர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நிலவரப்படி, தாம்பரம் அரசு மருத்துவமனையில் 36 பேரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்றனர்.
நேற்று காலை மேலும் 6 பேர் தாம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தாம்பரம் அரசு மருத்துவமனையில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப்பட்ட மக்கள் இருந்த மலைமேடு, காமராஜ் நகர், பல்லாவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்லாவரம் கன்டோன்மென்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயவர்ஷினி (70), ஜெயந்தி (45) ஆகிய இருவரும் தற்போது காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாவரம் பகுதியில் தொடர்ந்து பலரையும் பாதித்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் பரிசோதித்து மருந்துகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டில் பல இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.யாகூப், டிச., 10-ல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.