லட்சத்தீவு தலைநகர் கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்ததாக தருவைகுளம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். கவரட்டி தீவு தெற்கு அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுகளின் தலைநகரம் ஆகும். இங்கு கடலின் குறிப்பிட்ட பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கொச்சியில் இருந்து 350 கடல் மைல் தொலைவில் உள்ள கவரட்டி தீவு அருகே மோட்டார் படகு ஒன்று மீன்பிடித்து கொண்டிருந்தது. இது தொடர்பாக இந்திய கடலோர காவல்படையின் கொச்சி தலைமையகத்திலிருந்து லட்சத்தீவு அருகே ரோந்து வந்த கடலோர காவல்படை கப்பல் ஒன்றுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த ரோந்து கப்பல் அப்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்து கொண்டிருந்த மோட்டார் படகை சுற்றி வளைத்து கைப்பற்றினர்.
விசாரணையில் மோட்டார் படகு தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமானது என்பதும், கடந்த 16-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றதும் தெரியவந்தது. மோட்டார் படகில் இருந்த ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த முத்துப்பாண்டி, பழனிவலசு ராஜசேகர், தருவைகுளம் சரவணன், மிக்கேல், அந்தோணி, வேம்பார் அசோக், மில்டன், வெள்ளப்பட்டி காளி, கீழவைப்பார் விஜயன், தாளமுத்துக்க நகர் பிரபு ஆகிய 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கப்படும் என கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.