நாகர்கோவில்: பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று இரவு விட்டுவிட்டு சாரல் மழை பெய்து. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி,குழித்துறை, கோழிப்போர்விளை, குளச்சல், இரணியல், தக்கலை பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. மோதிரமலை, தச்சமலை பகுதிகளிலும் மழை பெய்தது.
பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏராளமான மரங்கள் முறிந்துவிழுந்தன. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி தேங்கியது.
மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. பாலமோரில் அதிகபட்சமாக 55.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.