கோவை: மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் தமிழகம் வந்து நேற்று மதுரை மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரெயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது.
அந்த வகையில், கோவையில் முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய 2 வழித்தடங்களில் மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
முதல் வழித்தடமாக உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரெயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகே உள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான நிதியை பெறுவதற்கு, ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது. இதனை ஏற்று மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கோவை வந்தனர். கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை உக்கடம் பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுணன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யுகு, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கி கூறினர். 2 நாள் ஆய்வு முடிந்த பின்னர் இன்று தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.