சென்னை: முதல்வர் தலைமையிலான திஷா கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பது வாடிக்கை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 4-வது மாநில அளவிலான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். சமீபத்தில் கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் தான் விழாவில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க., ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், செங்கோட்டையன் பங்கேற்றதற்கு, பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில் இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் தலைமையில் நடைபெறும் திஷா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம். கொப்பரை தேங்காய் விலை குறைவு என்பதால் கடந்த கூட்டத்தில் மானியம் கேட்டிருந்தேன். கடந்த முறை விடுத்த கோரிக்கைக்கு இம்முறை முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சிலர் வேறு விதமாக பேசி வருகின்றனர் என்றார். இதற்கு முன் நடந்த கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். செங்கோட்டையன் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.