சென்னை: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் கூட்டம் நடத்த வேண்டும் என அண்ணாமலை தலைமையில் மீனவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர்கள் குழு நேற்று டெல்லி சென்றது. டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர்.
அப்போது, சர்வதேச ஆழ்கடலில் இலங்கை கடற்படை படகில் அடிபட்டு இறந்த மீனவர், காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்கள் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. அப்போது, காணாமல் போன மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விரைவில் அழைத்து வர வேண்டும். இந்திய மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே சந்திப்புக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பணியில் இருக்கும் போது மீனவர்கள் மரணம் அடைந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க விபத்து இல்லா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும். 25 ஆண்டுகளாக மீனவர்கள் கடல் வெள்ளரிகளை சேகரிக்க தடை விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். ஃபைபர் படகுகளுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மீனவர் பிரதிநிதிகளிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 273 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 204 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கைக் காவலில் உள்ள மீதமுள்ள 69 மீனவர்களில் 61 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர், 8 பேர் குற்றவாளிகள். 3 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.
இந்திய அரசு, வெளியுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை அரசு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்க ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த இருதரப்பு ஆய்வுக் குழுவும் விரைவில் செயல்பட உள்ளது. அப்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். மீனவர்களின் குறைகளுக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில மீனவர் அணி தலைவர் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள், அயல்நாட்டு துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.