மதுரை: அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று அவனியாபுரத்தில் தொடங்கியது.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் இதுகுறித்து பேட்டியளிக்கையில், “காளைகள் கொண்டு செல்லும் இடம் வெளியேறும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 மருத்துவர்கள் மூலம் அனைத்து வகையான சிகிச்சை அளிக்க கூடிய வசதியில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிய காயம் மட்டுமல்லாமல் பெரிய காயம் ஏற்பட்டாலும் இங்கேயே சிகிச்சை அளிக்கும் விதத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறிய சிறிய காயமடைந்தவர்களை உடனடியாக ரெட்கிராஸ் உறுப்பினர்கள் மூலம் உடனடியாக சிகிச்சை மையத்திற்கு வீரர்கள் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் பலத்த காயம் அடைந்தவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது. மிகப்பெரிய காயம் ஏற்பட்டால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. காலை 7.30 மணிக்கு இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. சராசரியாக ஒவ்வொரு சுற்றுக்கும் 100 முதல் 110 மாடுகள் வரை அவிழ்க்கப்பட்டுள்ளது. தற்போது வரை 600 மாடுகளுக்கு மேல் அவிழ்க்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 400 காளைகளும் அவிழ்க்கப்பட்டு விடும். ஜல்லிக்கட்டில் விளம்பர பேனர்கள் மறைத்து வைப்பது குறித்து என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. வீரர்களுக்கு உரிய நேரத்தில் உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் வைக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்,