புதுடெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள பார்லிமென்ட் கூட்டுக் குழு, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.
வக்பு வாரிய சொத்துக்களை இணையதளம் மூலம் பதிவு செய்து சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய வக்பு கவுன்சில் அமைக்கப்படும் என்றும், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வக்பு வாரிய நிலமா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார் என்றும் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது முஸ்லிம்களுக்கு எதிரான செயல் என்றும் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, திருத்த மசோதா, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்ஃப் வாரியத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
ஏற்கனவே முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த அகில இந்திய சன்னி ஜமியத் உலாமா மற்றும் டெல்லியைச் சேர்ந்த இந்திய முஸ்லிம்கள் சிவில் உரிமைகள் (ICMR) ஆகியவை தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின.
இந்நிலையில், லோக்சபா செயலர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வக்பு வாரியத் திருத்த மசோதா தொடர்பாக பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், வல்லுநர்கள், அமைப்புகள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என்று பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே அனைத்து தரப்பினரும் 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை இந்த குழுவிடம் தெரிவிக்கலாம்.
எழுத்துப்பூர்வ கருத்துக்களை சமர்ப்பிப்பதோடு, குழுவின் முன் ஆஜராகி விளக்கத்தை அளிக்க விரும்புவோர் கடிதம் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.