முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தகவல் மையத்தையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்கொடுமை குறித்த முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கசிந்த குற்றத்திற்கு மத்திய அரசின் தேசிய தகவல் மையம் தான் பொறுப்பு என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகள் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதால் முதல் தகவல் அறிக்கை விவரங்களை மறைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அந்நிலையில், கடந்த ஜூலை மாதம் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததில் இருந்து, அதன்பிறகு நடைபெற்ற அனைத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் இதுபோல் கசிந்ததில்லை. இந்த வழக்கில் மட்டும் எப்படி விவரம் கசிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான மத்திய தகவல் நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட சதி உள்ளதா என்றும் விசாரிக்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ஆளான பெண்ணுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காலதாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.